சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.

கடந்த மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், பெற்ற மதிப்பெண்களில் திருப்தியில்லாத 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர்.

வழக்கமாக மாநில பாடத்திட்ட முடிவுகள் வெளியான பின், கல்லூரிகளில் முதற்கட்ட சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே சி.பி.எஸ்.இ. மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகும். ஆனால் இந்த முறை ஜூன் மாதத்தில் இரு வாரங்கள் கடக்க உள்ள நிலையிலும், முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த விவகாரத்தை ஜூன் 9 அன்று உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டு, விடைத்தாள்களை விரைவாக மறுமதிப்பீடு செய்து முடிவுகளை வெளியிட உத்தரவிட்டது. மேலும், முடிவுகளை வெளியிடும் திட்டம் குறித்து ஜூன் 12க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியது. காலக்கெடு கடந்தும் உறுதியான தகவல் இல்லாததால், உயர் கல்வி சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களும் பெற்றோரும் கலக்கத்தில் உள்ளனர்; சேர்க்கை விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.