சென்னையில் தினமலர் சார்பில் நடைபெற்ற மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசினார். குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏ.ஐ. போன்ற துறைகளில் படிப்போருக்கு கல்லூரி தேர்வும், அங்கு கிடைக்கும் பயிற்சியின் தரமும் முக்கியம் என்றார்.

கல்லூரியைத் தேர்வு செய்யும் முன், அங்கு வழங்கப்படும் கோச்சிங் எப்படி உள்ளது, இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது, மற்ற கல்லூரிகளை விட மேம்பட்ட பயிற்சிகள் உள்ளனவா, நிறுவனங்களுடன் தொடர்புகள் வலுவாக உள்ளதா போன்ற அம்சங்களை விசாரித்து பட்டியலிட்டு முடிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஏ.ஐ. தொடர்பான கருவிகள் குறித்து பலருக்கும் தெளிவு இல்லை என்றும், ஏ.ஐ. ஏஜென்ட் உருவாக்குவது போன்ற திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதைத் தொடங்க கோடிங் அவசியமில்லை; ஆன்லைன் வளங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம் என்றாலும், அவற்றை கற்காமல் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பதில் பயன் குறையும் என எச்சரித்தார்.

மேலும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் சார்ந்த பல புதிய படிப்புகள் வந்துள்ளதால் அவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சமூக ஊடக ரீல்ஸில் நேரம் செலவிடுவதற்குப் பதிலாக செய்தித்தாள் வாசிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கட்ஆப் மதிப்பெண் நிச்சயம் குறையும் என அவர் தெரிவித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ. போன்ற பாரம்பரிய துறைகள் மட்டும் படித்தால் வேலை உறுதி என்ற எண்ணம் தவறு; அதனுடன் தொடர்புடைய புதிய படிப்புகளை அறிந்து துறை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.