ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக பின்லாந்து கருத்து தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்த விலை உச்ச வரம்புக்குள் வாங்கப்பட்டால் அது தவறல்ல என பின்லாந்து கூறியது.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா பேச்சுகள்’ மாநாட்டில் பங்கேற்றார். இந்தியா இதுவரை ஐரோப்பாவுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த செயலும் செய்யவில்லை என்றும், சந்தை விலை மற்றும் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேச எண்ணெய் சந்தை ஸ்திரமாக இருக்க அப்போது ரஷ்யாவிடம் இருந்து வாங்குமாறு அமெரிக்காவே இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
அதே மாநாட்டில் பேசிய பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென், விலை உச்ச வரம்பு என்பது உலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தச் செய்வதற்காக அல்ல என்றார். எண்ணெய் வினியோகம் தொடர்வதை உறுதி செய்வதோடு, அதிலிருந்து ரஷ்யா மிகப்பெரிய லாபம் ஈட்டாமல் தடுப்பதே முக்கிய நோக்கம் என அவர் விளக்கினார்.
இந்தியா தன் தேவைக்காகவும், நிர்ணயிக்கப்பட்ட விலை உச்ச வரம்புக்குள் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கியதாகவும், இதில் வேறு உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் வால்டோனென் கூறினார்.





