ஆண்டுக்கு 100 டன் மின்னணுக் கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்யக்கூடிய முன்னோடி ஆலையை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதால் மின்னணுக் கழிவுகளும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. இக்கழிவுகளில் உள்ள தாமிரம், ஈயம், தகரம் போன்ற உலோகங்கள் சரியான முறையில் கையாளப்படாவிட்டால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த சவாலுக்கு தீர்வாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த முன்னோடி ஆலை திருச்சியில் உள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் சூழலில், மண், நீர் அல்லது காற்றை மாசுபடுத்தாமல் மதிப்புமிக்க உலோகங்களை மீட்டெடுக்க இந்த ஆலை உதவும் என குழு கூறியுள்ளது. கழிவுகளை முழுமையாக மறுசுழற்சி செய்யும் தனித்துவமான உள்நாட்டு தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.