வடக்கு கடலோர தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, சென்னை உட்பட 15 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையில், வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதாகவும், தற்போது வடக்கு கடலோர தமிழகத்தின் மேல் ஒரு சுழற்சி நிலவுவதுடன் அதனுடன் தொடர்புடைய காற்றழுத்தத் தாழ்வு பாதையும் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரியின் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.