ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல்களை ஈரான் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய நிலையில், அந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்பவே இவ்வாறு கூறப்படுவதாக ஈரான் தெரிவித்தது.

செய்தி விவரப்படி, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் இருந்த மூன்று கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. ஓமன் வளைகுடாவில் பலாவ் நாட்டு கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் எம்.டி. செட்டபெல்லோ மீது அமெரிக்க கடற்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டதாகவும், இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமெரிக்க துாதரக பொறுப்பு அதிகாரியை அழைத்து கண்டனம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. வணிகக் கப்பல்கள் மீது இத்தகைய கொடிய தாக்குதல்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடும் கண்டனம் பதிவு செய்தார்.

இதற்கிடையில், ஈரான் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார். ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட அறிக்கையில், 3 இந்தியர்கள் உயிரிழந்தது அமெரிக்காவின் “கொடூரமான” தாக்குதலால் ஏற்பட்டதாக கூறி, அமெரிக்காவை சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலுவான எதிர்ப்பை பதிவு செய்தார். கடலில் அப்பாவி மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது; இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என அவர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.