உலக அரங்கில் இந்தியா இனி வெறும் நுகர்வோராக இல்லாமல், சர்வதேச சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கும் நாடாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்ற ‘பாரத் இன்னோவேட்ஸ்’ தொடக்க நிகழ்வில் அவர் இதை கூறினார்.
இந்தியா–பிரான்ஸ் உறவு வர்த்தகத் தொடர்புகள் மற்றும் ராஜதந்திர கூட்டாண்மையைத் தாண்டி, நம்பிக்கை, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் வலுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மனிதர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட புதுமைகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாகவும், இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் உலக மக்களுக்கு பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்கி வருவதாகவும் மோடி கூறினார்.
சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்கு தீர்வு காண இருநாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டில் இந்தியா பெரிய மாற்றத்தை அனுபவித்து வருவதாகவும், நாட்டில் ஸ்டார்ட்அப் புரட்சி நடைபெற்று வருவதாகவும் மோடி கூறினார். நிகழ்வில் கூடியிருந்த இளம் தொழில்முனைவோர் இந்தியாவின் எதிர்காலத்தையும் இளைஞர்களின் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





