தமிழகத்தில் தொழில் முதலீடு மேற்கொள்ள தென் கொரியாவைச் சேர்ந்த மோட்டிலிங்க் நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டியதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, சியோலில் மோட்டிலிங்க் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அமைச்சர் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், முதல்வர் விஜய் தலைமையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையில் எடுத்துரைக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு முக்கிய விநியோகஸ்தராக உள்ள மோட்டிலிங்க், தமிழகத்தில் தனது உற்பத்தி அலகை விரிவுபடுத்துவதில் ஆர்வம் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்கள் காரணமாக முன்னணி உலகளாவிய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து தமிழகத்தைத் தேர்வு செய்கிறார்கள் என்றும், முதலீடுகளுக்கான விருப்பமான இடமாக மாநிலத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





