கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 11 வயது சிறுமி மர்மமாக உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்பு குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கு 2010ஆம் ஆண்டைச் சேர்ந்தது. கொல்லங்கோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சிறுமி துாக்கில் தொங்கி தற்கொலை செய்ததாக குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்திருந்தனர். இதை எதிர்த்து வாளையாரைச் சேர்ந்த நீதி போராட்டக் குழு உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில், 2010 முதல் 2023 வரை பாலக்காடு மாவட்ட எல்லைப் பகுதிகளில் 13 வயதுக்கு உட்பட்ட 28 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும், 11 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான அறிகுறிகளும் உடலில் காயங்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டதாகவும், இது தற்கொலை அல்லாமல் கொலைக்கான சாத்தியக்கூறுகளையும் முறையாக விசாரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதி சவுமென் சென் மற்றும் நீதிபதி ஷியாம்குமார் அமர்வு, குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையை பரிசீலித்து விசாரணையில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி போலீசாரை கடுமையாக விமர்சித்தது. இதையடுத்து, 11 வயது சிறுமியின் மரண வழக்கை உடனடியாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. ஏற்கனவே சி.பி.ஐ. விசாரித்து வரும் வாளையார் சகோதரிகளின் மரண வழக்கின் நிலவர அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு கூறியது. மேலும் வாளையார், கசபா, கொல்லங்கோடு, பட்டாம்பி, சோலையூர், சித்தூர் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் பதிவான பிற குழந்தைகளின் மர்ம மரண வழக்குகள் குறித்தும் சி.பி.ஐ. தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்குகளின் விவரங்களை சேகரிக்க பாலக்காடு மாவட்ட எஸ்.பி. உதவியை சி.பி.ஐ. நாடலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.