டெஹ்ரான்: ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “தவறாகக் கணக்கிட்டது” என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலுடன் போர் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் தாக்கத்தை இஸ்ரேல் தவறாக மதிப்பிட்டதாக பெசஷ்கியான் குறிப்பிட்டார். முன்னணி ராணுவ தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்தால் ஈரான் பலவீனப்படும், இஸ்லாமிய குடியரசு நிலைகுலையும் என இஸ்ரேல் நம்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈரான் மக்களின் தேசிய ஒருமைப்பாடும் ஒற்றுமையும் தான், போர்நிறுத்தம் தொடர்பான நிலைப்பாட்டை நோக்கி இஸ்ரேலை நகர்த்தியதாக அவர் கூறினார். மக்களின் பிரச்னைகளை அரசு ஒரு நிமிடமும் புறக்கணிக்கவில்லை; நாட்டின் சவால்களுக்கு தீர்வு காணவும், இன்னல்களை குறைக்கவும் அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவுடன் சாத்தியமான அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்த விளக்கத்துக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.