நடிகர் ரஜினி 2017 டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததுடன், “ரஜினி மக்கள் மன்றம்” என்ற அமைப்பை தொடங்கி உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டினார்; மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் 2020ல் உடல்நலக் காரணங்களை முன்வைத்து அரசியல் பிரவேசத் திட்டத்திலிருந்து அவர் பின்வாங்கினார். அதன் பின்னர் வழக்கம்போல் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.வில் இருந்து விலகி “வீ தி லீடர்” என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, ஒரு வீடியோவில் ரஜினி குறித்து பேசியதைத் தொடர்ந்து, அவரது பின்னணியில் ரஜினி இருப்பதாக தகவல்கள் பரவின.
மேலும், ரஜினியின் தீவிர ஆதரவாளராக குறிப்பிடப்படும் நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலில் குதிக்கப் போவதாக கூறிக்கொண்டே ரஜினியின் பெயரைச் சொல்லி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த சூழலில், அகில இந்திய ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் வெளியிட்ட அறிக்கையில், ரஜினியின் பெயரையோ புகைப்படத்தையோ எந்த அரசியல் கட்சியும் அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என்றும், ரஜினியின் உத்தரவுப்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.





