மதுரை: போதை கலாசாரத்தை ஒழிக்க அரசு இலக்கு

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் “போதையில்லா தமிழகம்” உருவாகும் என அமைச்சர் ராஜ்மோகன் நம்பிக்கை தெரிவித்தார். போதை கலாசாரத்தை வேரோடு அகற்றுவது அரசின் இலக்கு என்றும் அவர் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல குற்றங்களுக்கு அடிப்படையாக போதைப்பொருட்களே இருப்பதாகவும், குழந்தைகளுக்கு போதை பழக்கம் ஏற்பட்டால் வன்முறைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார். போதையை “வேர் மண்ணோடு” வீழ்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; பறிமுதல் நடவடிக்கைகளும் தொடர்கின்றன என்றார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை தொடர்பான வழக்குகளில் 1,238 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி அடையாளங்கள் அல்லது கயிறு அணிவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் பள்ளிகளில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் என்றும் அவர் கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவோம் என்றும், மாணவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான பயிற்சிகள் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், தலைமையெனில் மக்கள் தான் முக்கியம் என்றும், தனிநபர்களை புகழ்ந்து பேசும் அரசியல் தங்களிடம் இல்லை என்றும் கூறிய அவர், முதல்வர் விஜய் மக்களைப் பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.