கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தை பல பெரிய நிறுவன முறைகேடுகளை சந்தித்துள்ள நிலையில், புதியதாக எழுந்துள்ள ஒரு விவகாரம் நிதி அறிக்கை தாக்கல் முறைகளில் உடனடி சீர்திருத்தம் தேவை என்ற கோரிக்கையை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. ‘ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனம் ரூ.15 லட்சம் கோடி வருவாய் வந்ததாக தவறாக கணக்கு காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக செபி குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த நகை ஏற்றுமதி நிறுவனமாக தொடங்கி, பின்னர் தங்க சுத்திகரிப்புத் துறையில் உலகளவில் அறியப்படும் நிறுவனமாக வளர்ந்த ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், சுவிட்சர்லாந்தில் உள்ள ‘வல்காம்பி’ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் கூடுதல் கவனம் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் தற்போது செபியின் குற்றச்சாட்டுகள் நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

அறிக்கையின் படி, நிறுவனத்தின் அறிவிக்கப்பட்ட செயல்திறனை நம்பி லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். இதனிடையே, நிறுவன உரிமையாளர் ராஜேஷ் மேத்தா பங்குச்சந்தை பரிவர்த்தனைகளில் ஈடுபட இடைக்கால தடையை செபி விதித்துள்ளது. மேலும், செபி நியமித்த புலனாய்வு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கேட்கப்படும் கணக்கு ஆவணங்களை சமர்ப்பிக்கவும் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

செபியின் குற்றச்சாட்டுகளை நிறுவனம் மறுத்து, தங்களின் நிதி அறிக்கைகள் துல்லியமானவை என தெரிவித்துள்ளது; இருப்பினும் முறையான விசாரணைக்குப் பிறகே உண்மைகள் தெளிவாகும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.12,726 கோடி வரை சரிந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், செபி உத்தரவுக்குப் பிறகு பங்கு விலை தினமும் 5% வீழ்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தணிக்கையாளர்கள், இயக்குநர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் என பல அடுக்கு கண்காணிப்பு இருந்தும், பெரிய அளவிலான கணக்கு முரண்பாடுகள் பல ஆண்டுகள் கண்டறியப்படாமல் இருந்தது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தில் சுமார் 10% பங்குகளை வைத்திருப்பதும், கனரா வங்கி வழங்கிய ரூ.509 கோடி கடன் வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதும் பின்னணியாக, வெளிநாட்டு நிறுவனங்கள் வழி வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் வெளிநாட்டு தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளையும் வெளியிடுதல், பெரிய முதலீட்டாளர்கள் முன்கூட்டியே முரண்பாடுகளை கண்டறியும் தனிப்பிரிவுகள் அமைத்தல், தணிக்கையாளர்களின் பொறுப்பை உறுதி செய்தல், மேலும் ஒழுங்குமுறை அமைப்புகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வை பயன்படுத்துதல் போன்ற சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.