கோவை: தவெக யாரையும் ‘ஆள் பிடிக்கும்’ நிலையில் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். வேறு கட்சியில் இருந்த ஒரே ஒருவர் இணைந்ததை திமுக பெரிய சாதனை போல காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.
தவெக தலைவரை நாடி மக்கள் தாமாகவே வருகிறார்கள் என்றும், பல்வேறு இயக்கங்களில் இருந்து கட்சி மாறுவது புதிதல்ல என்றும் அவர் கூறினார். திமுக ஆட்சிக் காலத்தில் கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் ராஜினாமா செய்து பிறகு கட்சியில் சேர்ந்ததும், பின்னர் தேர்தலில் போட்டியிட்டதும் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தல் முடிவுகள் முழுமையாக வருவதற்கு முன்பே திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பி, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
தமிழகத்தில் முதன்முறையாக அதிமுக–திமுக இணைந்து ஆட்சியை பிடிப்பதற்கான சதிவலை பின்னப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். டில்லியில் பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்படி தெரியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சோலார் மின் உற்பத்தி தயாரிப்புக்காக கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.1 கோடி மானியம் பெறும் நிலையில், தமிழகத்தில் அது கிடைக்காததற்கான காரணத்தை ஸ்டாலின் விளக்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.





