அயோத்தி ராமர் கோவிலுக்கான நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை விசாரிக்க, உத்தர பிரதேச அரசு மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைத்துள்ளது.

ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட பிரமாண்ட கோவிலில் 2024-ல் கும்பாபிஷேகம் நடந்ததையடுத்து, பக்தர்கள் பெருமளவில் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் கணக்கு பொறுப்பாளராக இருந்த மஹிபால் சிங், நன்கொடை தொடர்பான விவகாரங்களில் நீண்ட காலமாக முறைகேடுகள் நடப்பதாக சமீபத்தில் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அரசு மவுனமாக இருப்பதாக குற்றம்சாட்டி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அறக்கட்டளையின் பொதுச்செயலர் சம்பத் ராய், உள்தணிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும் மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் SIT அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் லக்னோ மண்டல கமிஷனரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான விஜய் விஸ்வாஸ் பந்த், போலீஸ் ஐ.ஜி. கிரண், நிதித்துறை சிறப்புச் செயலர் நீல் ரத்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.