மஸ்கட்: ஓமன் கடற்கரை அருகே நடுக்கடலில் மூழ்கத் தொடங்கிய இந்தியக் கொடியுடன் சென்ற படகில் இருந்த 14 இந்திய மாலுமிகளை அமெரிக்க கடற்படை மீட்டுள்ளதாக தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
விராட்-1 என அடையாளம் காணப்பட்ட அந்தக் கப்பல், ஓமனின் ராஸ் அல் ஹத் நகருக்கு கிழக்கே சுமார் 80 கடல்மைல் தொலைவில் நீர் புகுந்து மூழ்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. எச்சரிக்கை வந்த நேரத்தில் கப்பலில் 14 இந்தியர்கள் இருந்தனர்.
எச்சரிக்கை கிடைத்ததும் மீட்புப் பணிக்கு அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தேடுதல் மற்றும் மீட்புக்கு அமெரிக்க பி-8 கடல் ரோந்து விமானம் உதவியதுடன், அமெரிக்க படகுகளும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
இதையடுத்து 14 மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த விபத்தை உறுதி செய்துள்ள ஓமனுக்கான இந்தியத் தூதரகம், ஓமன் அதிகாரிகள் மற்றும் உதவி கப்பல்களுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக தெரிவித்துள்ளது.





