புதுடில்லியில் சமீபத்தில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லும் முடிவை எடுத்துள்ளதாகவும், அதை பிரதமரிடமும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, விஜயை பிரதமர் சிறப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டதாகவும், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், தன் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரசுடனும் நட்புறவைத் தொடர விரும்புவதாகவும் கூறப்படுகிறது. டில்லி பயணத்தின் போது சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் இடதுசாரி தலைவர்களையும் அவர் சந்தித்தார்; சோனியாவை சந்தித்த போது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவால் எம்.பி. ஆனதாக கூறப்படும் காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி உடன் இருந்ததாக தகவல்.
அடுத்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் பிரதமராகுவார் என சக்கரவர்த்தி கூறியபோது, சோனியா மற்றும் ராகுல் மகிழ்ச்சி அடைந்ததாகவும், விஜய் எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசுடனும் காங்கிரசுடனும் உறவை சமநிலையில் வைத்துக் கொள்ளும் முயற்சியாகவே இதை டில்லி அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன; இதன் காரணமாகவே ‘இந்தியா’ கூட்டணியில் இணைவது குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.





