புதுடில்லி: காலனித்துவ ஆட்சி கால நடைமுறைகள் மற்றும் தேவையற்ற அலங்காரக் கூறுகளை நீக்கும் நோக்கில் இந்திய ராணுவம் புதிய சீருடை விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ராணுவத்தின் மரபுகளும் தொழில்முறைத் தரநிலைகளும் பேணப்படும் வகையில் இந்த மாற்றங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட விதிகள் ‘ராணுவ சீருடைகள் – 2026’ என்ற 174 பக்க கையேட்டில் தொகுக்கப்பட்டுள்ளன. இது எட்டு ஆண்டுகளுக்கு முன் அமல்படுத்தப்பட்ட சீருடை விதிமுறைகளுக்கு மாற்றாக வருகிறது.

முக்கிய மாற்றமாக, ராணுவத்தில் ‘3 ஏ’ என அழைக்கப்படும் பிரிட்டன் பாணி குளிர்கால உடைக்கு மாற்றாக பாரம்பரிய பாண்டி ஜாக்கெட் சேர்க்கப்படுகிறது. பழைய உடை 2029 ஜூன் 30க்குள் முழுமையாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணுவம்–கடற்படை–விமானப்படை ஆகிய மூன்று படைகளுக்கும் பொதுவான எண் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விழாக்கால, பணிக்கால, உணவக (மெஸ்), போர்க்காலம் என நான்கு வகை சீருடைகள் நடைமுறையில் இருப்பதாகவும், உணவக உடை எண் 5 மற்றும் 6-ல் உள்ள பவுச் பெல்ட்டை நீக்குதல், விருப்பப்பட்டால் வாளை எடுத்துச் செல்லுதல், ‘ராயல்’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவதை நிறுத்துதல் போன்ற சீர்திருத்தங்களும் இடம்பெற்றுள்ளன.

பணியில் இருக்கும் வீரர்கள் பச்சை குத்திக்கொள்வதும், காது/மூக்கில் ஆபரணங்கள் அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பெண் அதிகாரிகள் கணுக்கால் அளவுக்கு பேன்ட் அணியவும், துப்பட்டாவுடன் புடவை அல்லது சல்வார் அணியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொட்டு வைப்பதும் உதட்டு சாயம் அணிவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.