ஈரோடு: தவெகவை நம்பி வரும் மாற்றுக் கட்சியினரை தங்கள் தரப்பு அரவணைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை வழங்குவதே தவெக அரசின் இலக்கு என அவர் கூறினார்.
அதற்காக மருத்துவமனைகள் ஆய்வு செய்யப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன என்றும், அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரம் குறைத்தல், சுத்தமான கழிவறைகள், மலிவு விலை கேன்டீன் போன்ற மாற்றங்கள் படிப்படியாக கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஈரோட்டில் புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதாக வெளியான, “முதல்வர் விஜய் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ‘ஷாப்பிங்’ செய்கிறார்” என்ற விமர்சனம் குறித்து கேள்வி எழுந்தபோது, ஒருகாலத்தில் எதிர்த்து உருவான கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வராக வேண்டும் என்ற ஆசையை அது காட்டுகிறது என பதிலளித்த அமைச்சர், தவெகவை நம்பி வருவோரை அரவணைப்போம் என்ற நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.





