கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று நேரில் அழைத்து பாராட்டினார்.
தேனி மாவட்டம் காமயக்கவுண்டம்பட்டியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் ஆக பணியாற்றி வருகிறார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு, நாட்டுக்கும் தனது படைப்பிரிவுக்கும் பெருமை சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவரது பணியை சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசு கீர்த்தி சக்ரா விருதை வழங்கியது. இந்த விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
இந்நிகழ்வில், மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினரை முதல்வர் விஜய் கவுரவித்து, தமிழக அரசு சார்பில் ரூ.48 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் குடும்பத்தினருடன் கலந்துரையாடி நலம் விசாரித்த அவர், வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.





