கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து விசாரணை கைதி தப்பிய சம்பவத்தில், லஞ்சம் பெற்று தப்பிக்க உதவியதாக கூறப்படும் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த அஜித்குமார் (34) என்பவர், ஆன்லைன் வழியாக பொருட்கள் விற்பனை என கூறி மோசடியில் ஈடுபட்டதாக திருப்பூர் போலீசார் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்திருந்தனர். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அவர்மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால் வீக்கம் மற்றும் கொழுப்பு கட்டி தொடர்பான பாதிப்பு காரணமாக, கடந்த ஜூன் 12-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரடைந்தாலும், மேலும் ஐந்து நாட்கள் மருந்து வழங்க வேண்டியதால் சிகிச்சை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்த நிலையிலும், கழிவறைக்கு சென்ற போது கைதி தப்பிச் சென்றார். பின்னர் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு, கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்கப்பட்டார்.

விசாரணையில், காவலர் ஷேக் முகமது ரோஷன் (23) கைதி தப்பிக்க உதவியதாகவும், கைதியின் நண்பர் விஜயகுமார் (35) மூலம் யு.பி.ஐ. வழியாக ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து ரோஷன் மற்றும் விஜயகுமார் கைது செய்யப்பட்டனர். பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி எஸ்.ஐ. பெரியசாமி, ஆயுதப்படை போலீசார் பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.