தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி நியமித்த உண்மை கண்டறியும் குழுவிடம், தேர்தல் பணிக்காக வழங்கப்பட்ட நிதியின் குறிப்பிடத்தக்க பகுதி செலவிடப்படாமல் பதுக்கப்பட்டதாகவும், அதனால் பிரச்சாரம் பாதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த பின்னடைவை ஆய்வு செய்ய டெல்லி மேலிடம் சார்பில் ஐவர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம். இதயதுல்லா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதலில் 234 தொகுதிகளிலும் கருத்து கேட்க திட்டமிட்டாலும், நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் தோல்வியடைந்த 23 தொகுதிகளில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளியான தகவலின்படி, வேளச்சேரி, சோளிங்கர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பென்னாகரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளில் விசாரணை முடிந்துள்ளது. இதில், வேட்பாளர்கள் மாவட்ட தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை தேர்தல் பணிக்கு அழைக்காமல் ஒதுக்கியதாகவும், தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் அதிகமாக இணைந்து செயல்பட்டதாகவும் கட்சியினர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதமுள்ள 17 தொகுதிகளில் விசாரணை முடிந்த பின், காங்கிரஸ் தோல்விக்கான காரணங்கள் குறித்து குழு டெல்லி மேலிடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.





