அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கட்சி பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்தார். கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிற நிலையில் தலைமை மவுனம் காப்பது ஏன் என்றும், தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்ய பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க 47 தொகுதிகளில் வென்றதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பான்மை இல்லாமல் திணறிய தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அரசுக்கு தாம் தலைமையிலான 25 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததாக தெரிவித்தார். அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு பெரும்பான்மையை நிரூபித்த பின் த.வெ.க தரப்பு அதனை மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டதாகவும், சிலர் மீண்டும் பழனிசாமி அணிக்கு திரும்பிய நிலையில் நான்கு எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பழனிசாமிக்கு எதிராக சென்றவர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதாகவும், பின்னர் திரும்பியவர்களுக்கு அந்த பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகவும், யாரும் கேள்வி கேட்கக் கூடாது, பேசக் கூடாது என்ற சர்வாதிகார போக்கில் அவர் செயல்படுவதாகவும் சண்முகம் கூறினார். ஆலோசனைகள் கேட்காமல் குடும்பத்தாரின் கருத்தை மட்டுமே கேட்பதாகவும், தன்னைச் சுற்றி “வேலி” போட்டு ஜால்ராக்களை வைத்துக் கொண்டிருப்பதாகவும், தனது மகனை அரசியலுக்கு கொண்டு வர முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் விலகி வருவதாக கூறிய அவர், பா.ம.க கூட்டணி ஆதரவு இல்லையெனில் வட மாவட்டங்களில் வெற்றி சாத்தியமில்லை என்றும், வெற்றிகளில் பெரும்பங்கு கூட்டணி காரணம் என்றும் வாதிட்டார். கட்சியை மீண்டும் வலுப்படுத்த அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய பொதுக்குழு, செயற்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி, இல்லையெனில் தாங்கள் நீண்ட காலம் மவுனமாக இருக்க மாட்டோம் என எச்சரித்தார்.





