துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெறும் உலகக்கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
இந்தியாவின் தீரஜ் (24) மற்றும் கும்கும் (17) ஜோடி, ஒலிம்பிக் சாம்பியன்களான தென் கொரியாவின் ஓ யெ ஜின்–கிம் ஜே டியோக் ஜோடியை இறுதிப்போட்டியில் 5-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த கலப்பு இரட்டையர் பிரிவில் தீரஜ்–கும்கும் ஜோடி தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. நாக் அவுட் சுற்றுகளில் டென்மார்க், அமெரிக்கா, ஜெர்மனி அணிகளை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதற்கிடையில் தீரஜ் தனிநபர் பிரிவில் அரையிறுதியில் விளையாட உள்ளார். அவர் வெற்றி பெற்றால், இந்த தொடரில் அவருக்கு இரண்டாவது பதக்கம் உறுதியாகும்.
கடந்த மாதம் சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்த உலகக்கோப்பை ஸ்டேஜ் 2-ல் தங்கம் வென்ற இந்திய அணியில் கும்கும் இடம்பெற்றிருந்தார்.





