டெஹ்ரான்: மேற்காசிய போர் பதற்றம் தொடரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 100 நாட்களுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் நடுக்கடலில் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிக்கையின்படி, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா சுற்றுவட்டாரத்தில் இயங்கிய 13 இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்களில் மொத்தம் 562 இந்திய மாலுமிகள் 107 நாட்களுக்கும் மேலாக கடலில் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரானை மையமாகக் கொண்டு அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டணி நடத்தும் போர் 100 நாட்களை கடந்துள்ளதாகவும், இதனால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் கப்பல் போக்குவரத்து கடும் நிச்சயமின்மையை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. வளைகுடா முழுவதையும் கணக்கிட்டால் 18,000 முதல் 23,000 இந்திய மாலுமிகள் வரை இந்த பதற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடந்த தாக்குதல்களின் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சில கப்பல்களில் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததால், இந்தியாவில் உள்ள குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முடியாமல் மாலுமிகள் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.





