மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அலைபேசி கொண்டு செல்ல தடை அமலில் இருக்கும் நிலையில், கோயில் வளாகத்திற்குள் இளைஞர் ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டதாக கூறப்படும் சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக கோயில் வளாகத்தில் நடந்த சில அத்துமீறல் சம்பவங்களைத் தொடர்ந்து, பக்தர்கள் கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, அலைபேசிகளை கட்டணம் செலுத்தி பாதுகாப்பாக வைக்க கோயில் நிர்வாகம் வசதி ஏற்படுத்தியது.
நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார், மெட்டல் டிடெக்டர் சோதனை உள்ளிட்ட தீவிர கண்காணிப்புக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், சமீபத்தில் 16 வயது சிறுமி பொற்றாமரைக் குளத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில் போலீசாரின் அலட்சியமே காரணம் என ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
தற்போது அதே பொற்றாமரைக் குளம் பகுதியில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து வெளியிட்டதாக கூறப்படும் புதிய சம்பவம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. பக்தர்கள், அலைபேசி எப்படி சோதனைகளை மீறி உள்ளே சென்றது என கேள்வி எழுப்பி, பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, அறநிலையத் துறையும் போலீசாரும் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.





