பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான அரசு முறை பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரான்சின் நீஸ் நகரில் “புதிய படைப்புகளை கண்டுபிடிப்பது இந்தியாவின் மரபணுவில் உள்ளது” எனக் கூறி, உலகளாவிய சவால்களுக்கு தீர்வு வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்து வருவதாக தெரிவித்தார்.
நீஸ் விமான நிலையத்தில் பிரான்ஸ் அமைச்சர்கள் அவரை வரவேற்றனர். பின்னர் நீஸில் உள்ள இந்திய வம்சாவளியினர் சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை மோடி சந்தித்தார்.
இருவரும் இணைந்து “பாரத் இன்னோவேட்ஸ்” என்ற புத்தாக்க மாநாட்டை தொடங்கி வைத்தனர். பிரான்சில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இந்தியா–பிரான்ஸ் உறவு புதுமை மற்றும் உத்வேகத்தை மையமாகக் கொண்ட தொலைநோக்கு கூட்டாண்மை என மோடி கூறினார்.
இந்த தளம் இந்திய திறமைகளுக்கும் ஐரோப்பிய மூலதனத்திற்கும் இடையே பாலமாக இருந்து, இளம் இந்திய சிந்தனையாளர்கள் ஐரோப்பிய நிபுணர்களுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும் அவர் விளக்கினார். இந்தியாவில் தற்போது ஸ்டார்ட்அப் சார்ந்த மாற்றம் நடைபெறுகிறது; மனிதகுல நலனுக்கான தீர்வுகளை இளைஞர்கள் உருவாக்கி வருகிறார்கள் என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழல் வளர்ந்து வருவதையும், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் புத்தாக்கம் விரிவடைவதையும், அணுசக்தித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். இந்திய ஸ்டார்ட்அப்களுடன் முதலீட்டாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் மோடி அழைப்பு விடுத்தார்.





