ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கு முன், நீஸில் நடைபெற்ற “பாரத் இன்னோவேட்ஸ்” நிகழ்ச்சியை மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர், பிரெஞ்ச் ரிவேரியாவில் உள்ள பாரம்பரிய கெரிலோஸ் (Villa Kerylos) கட்டடத்தில் இரு தலைவர்களும் அரசு முறையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கெரிலோஸ் கட்டிடம் 1900-களின் தொடக்கத்தில் கிரேக்க கட்டிடக்கலை பாணியில், பிரான்ஸ் கட்டடக் கலைஞர் இமானுவேல் பொன்ட்ரிமோலி வடிவமைத்து கட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. சந்திப்புக்கு வந்த பிரதமர் மோடியை அதிபர் மேக்ரான் கட்டியணைத்து வரவேற்றார்.

இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்திய தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரான்ஸ் தரப்பில் ஐரோப்பா மற்றும் வெளியுறவு விவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் மற்றும் உயர் அதிகாரிகள் மேக்ரானுடன் கலந்து கொண்டனர்.