பிரான்ஸ் பயணத்தை முடித்த பிறகு ஸ்லோவேக்கியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பிரடிஸ்லாவாவில் அந்நாட்டு பிரதமர் ராபர்ட் பிகோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
நிருபர்களிடம் பேசிய மோடி, அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்லோவேக்கியாவுக்கு வருவது இதுவே முதல் முறை எனக் குறிப்பிட்டு, இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்றார். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்ட முன்னேற்றம் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல், ரயில்வே, அதிநவீன உற்பத்தி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக மோடி கூறினார். இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுக்க உதவியதற்காக பிகோவுக்கு நன்றி தெரிவித்த அவர், தொழில்துறையினர், ஸ்டார்ட்-அப்கள், வர்த்தகர்கள் பலன் பெறும் வகையில் அதை விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
எதிர்கால ஒத்துழைப்பில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறிய மோடி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றார். மேலும், ஸ்லோவேக்கியா பல்கலையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக இந்தியா ‘இருக்கை’ ஒன்றை அமைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
விண்வெளித் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த பெரிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறிய மோடி, இந்தியா முன் எப்போதும் இல்லாத வேகத்தில் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், அந்த வளர்ச்சியில் ஸ்லோவேக்கியா நிறுவனங்கள் பங்கெடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். சிவில் அணுசக்திக்கு இரு நாடுகளும் முன்னுரிமை அளிப்பதாகவும், அந்தத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். இது பாதுகாப்புத் தொழில்துறையில் கூட்டு வளர்ச்சி, கூட்டு உற்பத்தி மற்றும் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகம் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராபர்ட் பிகோ, இந்தியா மற்றும் ஸ்லோவேக்கியா பல பொதுவான அம்சங்களால் இணைக்கப்பட்டுள்ளன எனக் கூறி, இந்தியாவின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல், ஏஐ பயன்பாட்டில் இந்தியாவின் முன்னிலை குறித்து குறிப்பிட்ட அவர், இந்தியா–ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் லட்சியமிக்கது என்றும், அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஸ்லோவேக்கியா எடுக்கும் என்றும் தெரிவித்தார்.





