அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இறுதி செய்யப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். மேற்கு ஆசியப் பகுதியில் நீடித்த பதற்றத்தை குறைக்கும் முக்கிய முன்னேற்றமாக இதை அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைதளப் பதிவில், அந்தப் பதற்றம் உலகளவில் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவையும், பல நாடுகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியதாக மோடி தெரிவித்தார். இந்நிலை முடிவுக்கு வருவதற்கான முயற்சியாக இந்த ஒப்பந்தத்தை அவர் வர்ணித்தார்.
இந்த அமைதி ஒப்பந்தம் ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளது. ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவது அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் இது துணைபுரியும் என்று குறிப்பிட்ட மோடி, மீதமுள்ள விவகாரங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நிலையான இறுதி ஒப்பந்தம் எட்டப்படுவதை இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.





