திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் உருவான தற்போதைய நிலைக்கு திமுகவே காரணம் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். மக்கள் அமைதியை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில், மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரது கட்சியில் இணைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் இதை கூறினார்.
மின்தடை ஏற்படும் பகுதிகளை கண்காணிக்க 125 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 500 பேர் கொண்ட குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மாநில அளவில் 3.5 கோடி மின்பயனாளிகள் உள்ள நிலையில், புகார்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக மின்சார கட்டமைப்பு பின்தங்கியுள்ளதாக கூறிய அவர், தற்போதைய நிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார். மேலும் ஸ்டாலின் மற்றும் பழனிசாமி இணைந்து ஆட்சி அமைக்க முயன்றார்களா என்பது குறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
குடும்ப நலனை மையமாக வைத்து அரசியல் நடத்தினால் கட்சித் தொண்டர்கள் விலகுவது இயல்பு என்றும் அவர் கருத்து தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்குவது மாநில உரிமை சார்ந்த விஷயம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை ஆய்வு செய்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.





