திமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய துறைகளில் நடந்ததாக கூறப்படும் டெண்டர் முறைகேடுகளை ஆய்வு செய்ய, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய், மக்கள் நல்வாழ்வு, தொழில், ஊரக வளர்ச்சி, நீர்வளம், வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, மின்சாரம், கூட்டுறவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்ட 41 துறைகள் உள்ளன. இவற்றில் முக்கிய துறைகளுக்கு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ரூ.20,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அந்த நிதி நலத்திட்ட உதவிகள், மானியங்கள் மற்றும் கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் தலையீடு ஏற்பட்டதாகவும், சில முன்னாள் அமைச்சர்கள் பினாமிகள் வழியாக ஒப்பந்தங்களை பெற்றதாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பணிகள் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பணிகள் தொடங்கும் முன்பே கமிஷன் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கப்பட்டதாகவும், இதில் துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின், முக்கிய துறைகளில் “கமிஷன் கலாசாரம்” முடிவுக்கு வர வேண்டும் என முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாகவும், டெண்டர் விவகாரங்களில் அமைச்சர்களின் தலையீடு இருக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 18-ம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் புள்ளிவிவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, துறைகளில் உள்ள “நேர்மையான” அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், துறைச் செயலர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதற்கட்ட ஆலோசனை நடந்துள்ளதாகவும் தகவல். குழுக்கள் தகவல்களை திரட்டி வருவதாகவும், விரிவான அறிக்கைகள் துறைச் செயலர்கள் வழியாக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.





