திருப்பரங்குன்றம் விவகாரத்தில் “முன்பிருந்த நிலையே தொடரும்” என்று தமிழக சட்ட அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளதாக, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் தெரிவித்துள்ளார். அந்தக் கருத்தை வரவேற்ற அவர், சங்க காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை திருப்பரங்குன்றத்தில் இருந்த நிலை என்ன என்பதை மீண்டும் ஆராய வேண்டும் என வலியுறுத்தினார்.
திருமுருகாற்றுப்படை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை மேற்கோள் காட்டி, திருப்பரங்குன்றம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான முருகன் குன்றுத் தலமாகவும், திருவிழா மரபுகள் கொண்ட தலமாகவும் விளங்கியதாக அவர் குறிப்பிட்டார். குன்றின் மீது கார்த்திகை தீபம் ஏற்றும் நடைமுறையும் நீண்டகால வழக்கமாக இருந்ததாகவும் கூறினார்.
மதுரையில் சுல்தான் ஆட்சி இருந்த இடைக்காலத்திலும் பின்னர் விஜயநகர ஆட்சிக்கால மாற்றங்களிலும் தீபம் ஏற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார். மேலும், வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் (மலையில் குறிப்பிட்ட சிறு பகுதியைத் தவிர) இது முருகன் குன்று என அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குன்றின் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி தீர்ப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வால் உறுதி செய்யப்பட்டதாகவும், அந்த வழக்கத்திற்கு திருப்பரங்குன்றத்தில் வாழும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும்; பழைய நடைமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கோவில் நிர்வாகம் தொடர்பாக முறைகேடுகள் நடந்ததாகக் கூறிய அவர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வரலாற்றில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஓர் அங்கமாக இருந்ததாகவும், அதை மீண்டும் இணைக்க வேண்டும் என்றும் கோரினார். செயல் அலுவலரை வெளியேற்ற வேண்டும்; குன்றின் மீது கார்த்திகை தீபம் மீண்டும் ஏற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.





