திருப்பூரில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில், தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராயபுரம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (34) ஓட்டலில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். அவர் ஜூன் 6 அன்று ஆன்லைனில் வாரிசு சான்றிதழுக்காக விண்ணப்பித்த நிலையில், தொட்டிபாளையம் விஏஓவாக உள்ள ஞானசேகரன் (37) ஆவணங்களை சரிபார்க்க நேரில் வருமாறு தொடர்பு கொண்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆவண சரிபார்ப்பின்போது, தாயாரின் இறப்பு சான்றிதழ் எடுக்க நான்கு ஆண்டுகளை கடந்துள்ளதால் உடனடியாக சம்பந்தப்பட்ட சான்றிதழை வழங்க முடியாது; தாமதம் ஏற்படும் என கூறியதாகவும், பின்னர் சான்றிதழ் வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுத் தள்ளுபடி செய்து ரூ.4,000 வழங்குமாறு கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் தர விருப்பமில்லாத கிருஷ்ணமூர்த்தி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி ரூ.4,000 உடன் அலுவலகத்துக்கு சென்றபோது, பணத்தை பெற்றுக்கொண்ட தருணத்தில் டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையிலான குழு மறைந்து இருந்து பிடித்து, ஞானசேகரனை கைது செய்தது.





