விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக தமிழக அரசு துணிச்சலுடன் செயல்பட்டு, சட்டவிரோத கட்டுமானங்களை ‘வரன்முறை’ செய்து விடும் நீண்டகால நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நகரமைப்பு வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை வழங்கி, அதிகபட்ச விதிமீறல் உள்ள கட்டடங்களை இடிக்க வேண்டும் என கூறியிருந்தாலும், முந்தைய தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள் அவற்றை முழுமையாக அமல்படுத்த விரும்பவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். குறைந்தபட்ச விதிமீறல்களை முதலில் வரன்முறை செய்து, பின்னர் பெரிய விதிமீறல்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் ‘113 சி’ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, 2017ல் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு விதிமீறல் கட்டட வரன்முறை திட்டத்தை அறிவித்தது. 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே தகுதி பெறும் என நிபந்தனை விதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2019 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இத்திட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாகவும், பதிவு கட்டணமாக மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வரை வசூலானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தனிநபர்கள் தொடர்ந்த வழக்குகளால் திட்டம் பாதியில் முடங்கியதுடன், பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் போடப்பட்டன. இதுகுறித்த வழக்கில் அரசு உரிய பதில் அளிக்காமல் சுமார் ஐந்து ஆண்டுகளாக மவுனமாக இருந்ததால், விதிமீறல்கள் தொடர்ந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர், சென்னை பெருநகரில் விதிமீறல் கட்டடங்களால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும், அரசுத் திட்டங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும் தெரிவித்தார். முதல்வருக்கு விரிவான விளக்க அறிக்கை அளிக்க உள்ளதாகவும், முதல்வரின் முடிவின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.





