லண்டன்: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதற்கு தடை விதிக்கவும், கேமிங் மற்றும் நேரலை ஒளிபரப்பு சேவைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

இந்த விதிமுறைகளின் கீழ் எந்தெந்த தளங்கள் வரும் என்பது குறித்து அவர் உடனடியாகத் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.

வீடியோ அறிக்கையில், தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் சூழலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், முழுமையான தடை தான் சரியான தேர்வாகத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது சவாலாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட ஸ்டார்மர், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செல்வாக்கை எதிர்கொள்வது அரசுகளின் பொறுப்பு என்றும், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனில் சமரசம் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்தப் பட்டியலில் பிரிட்டனும் இணைய உள்ள நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இதேபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.