அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளதாகவும், அதற்கான 14 அம்ச அடிப்படைத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, லெபனான் உட்பட அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் போருக்கு உடனடியாகவும் நிரந்தரமாகவும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம்; அதன் இறையாண்மையை மதிப்போம் என அமெரிக்கா உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடல் பாதுகாப்பு தொடர்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கடற்படை முற்றுகையை 30 நாட்களுக்குள் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஈரானிய ஏற்பாடுகளின் கீழ் அதே காலக்கெடுவில் கப்பல் போக்குவரத்துக்கு ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் அம்சங்கள் தெரிவிக்கின்றன. ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதும் இதில் இடம்பெற்றுள்ளது.

பொருளாதார அம்சங்களில், ஈரான் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை மீதான தடைகளை இடைநிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான புனரமைப்புத் திட்டங்களை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தில் கூடுதல் படைகளை அனுப்பவோ புதிய தடைகளை விதிக்கவோ மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுசக்தி விவகாரத்தில் இறுதி உடன்பாட்டை எட்டி, தடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேசக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்த செயலாக்கத்தை மேற்பார்வை செய்வது, ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானத்தின் மூலம் இறுதி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் பெறுவது, மேலும் 24 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட ஈரானிய நிதியை விடுவிப்பது (இதில் பாதி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே) ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன; குறிப்பிட்ட நடவடிக்கைகள் நிறைவேறிய பின்னரே இறுதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.