நாக்பூர்: வாகனங்கள் 100% எத்தனால் எரிபொருளில் இயங்குவதற்கு மத்திய அரசு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

இந்தியா ஆண்டுதோறும் சுமார் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதி சுமையை குறைக்கும் நோக்கில், பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது.

கரும்பு, சோளம் போன்ற பயிர்களின் கழிவுப் பொருட்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. உலகளவில் எரிபொருளில் எத்தனால் கலப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 5–10% கலப்பாக தொடங்கிய திட்டம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 20% அளவில் நடைமுறையில் உள்ளது.

அடுத்த கட்டமாக ‘பிளெக்ஸ்-ப்யூல்’ வகை வாகனங்கள் சமீபத்தில் அறிமுகமாகி, 85% எத்தனால் கலந்த E85 எரிபொருளைப் பயன்படுத்தும் வசதி ஏற்பட்டுள்ளது. இதற்கான முதல் பிரத்யேக வினியோக நிலையம் டில்லியில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோல் இல்லாமல் முழுமையாக 100% எத்தனாலை பயன்படுத்தி வாகனங்களை இயக்க சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கட்கரி தெரிவித்தார்.