தமிழகமே பா.ஜ.க.வின் அடுத்த முக்கிய இலக்கு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது. டில்லியில் சமீபத்தில் நடந்த தமிழக பா.ஜ.க. மையக்குழு கூட்டத்திற்குப் பிறகு அவர் இந்த கருத்துகளை முன்வைத்துள்ளார்.
கூட்டத்திற்குப் பின்னர் தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் சிலரை தனியாக அழைத்து அவர் ஆலோசனை நடத்தியதாக தகவல். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை இணைத்து மாநிலத் தலைமையின் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும், அமைப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும், 2029 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை வைத்து இப்போதே தயாரிப்புகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் அனுப்பப்படுவார்கள் என்றும், அவர்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, த.வெ.க. அரசின் தவறுகளையும் தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்.




