சென்னை: நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் விதிக்கப்படுகிறதா என்று பாஜக தலைவர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், சிஆர்பிஎப் மற்றும் சிஐஎஸ்எப் படைகளின் இரு அடுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் ஏற்பாடு, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

மேலும், தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரச் சரிபார்ப்பு, பல கட்ட உடல் பரிசோதனை, பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்புடன் கூடிய பல அடுக்கு மேற்பார்வை அமைப்பு ஆகியவை நடைமுறையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகளை மாணவர்கள் பாராட்டுவார்கள் என கூறிய அவர், நுழைவதற்கு முன் அதிகரிக்கப்பட்ட சோதனைகள், நீண்ட நேர உடல் பரிசோதனை, மேலும் தேர்வு நேரத்தை 180 நிமிடங்களில் இருந்து 195 நிமிடங்களாக உயர்த்துவது போன்றவை மாணவர்களின் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றார்.

இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றை விரைவில் சரிசெய்வதாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீட் மறுத்தேர்வுக்காக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகள் தற்போதைய சிக்கலைத் தீர்க்காமல் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.