நியூ ஜெர்சி: அமெரிக்காவின் மெட்லைப் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘எப்’ பிரிவு ஆட்டத்தில், எகிப்துடன் பெல்ஜியம் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து பெல்ஜியம் பந்தை அதிகமாகக் கட்டுப்படுத்தினாலும், எகிப்தின் ஒழுங்கான தற்காப்பை உடைத்து கோல் வாய்ப்புகளை உருவாக்குவதில் சிரமப்பட்டது. எகிப்து கேப்டன் முகமது சலா தனது 34வது பிறந்தநாளில் களமிறங்கினார்.
29வது நிமிடத்தில் சலா வழங்கிய உதவியுடன் முஸ்தபா முகமது கோல் அடித்து எகிப்தை 1-0 என முன்னிலைப்படுத்தினார். முதல் பாதி முடிவில் எகிப்து முன்னிலை நீடித்தது.
இரண்டாம் பாதியிலும் எகிப்தின் தற்காப்பு உறுதியாக இருந்ததால் பெல்ஜியம் கோல் கணக்கைத் தொடங்க முடியாமல் இருந்தது. ஆனால் 86வது நிமிடத்தில் லோயிஸ் ஒபெண்டா கோல் அடித்து பெல்ஜியத்தை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.
கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் மேலும் கோல் அடிக்காததால் போட்டி 1-1 என முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.





