நீண்ட தூரத்தில் உள்ள நில இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ‘லாங் ரேஞ்ச் லேண்ட் அட்டாக் க்ரூஸ் மிசைல்’ (LRLACM) ஏவுகணையை டிஆர்டிஓ ஜூன் 15 அன்று வெற்றிகரமாக பறக்கும் சோதனை செய்தது.
இந்த சோதனை ஒடிசா கடற்கரையோரம் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து நடத்தப்பட்டது. ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியதுடன், துவக்கம் முதல் இறுதிக்கட்டம் வரை தனது செயல்திறனை வெளிப்படுத்தியதாக டிஆர்டிஓ தெரிவித்தது.
இந்த ஏவுகணை இந்தியத் தொழில்துறையின் விரிவான பங்களிப்புடன் டிஆர்டிஓ மூலம் வடிவமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்புடன் இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படுவதால் செலவுகள் குறைய வாய்ப்புள்ளதாகவும் டிஆர்டிஓ தெரிவித்தது. இந்த வெற்றி சோதனை, இந்தியாவின் நீண்ட தூர துல்லியத் தாக்குதல் திறனில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.





