தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல்/கருத்தியல் மற்றும் மத சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், அரசு பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் கடந்த மார்ச்சில் செய்யப்பட்ட திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன. அதில், பள்ளி வளாகத்தை அரசியல், கருத்தியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சி, கூட்டம், பிரசாரம் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த உத்தரவை அமல்படுத்துவதாக ஆண்டுதோறும் ஏப்.30க்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இதனை எதிர்த்து வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தேனியைச் சேர்ந்த ஸ்ரீகாமராஜ் வித்யாலயா தொடக்கப்பள்ளி சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முன்பு, அரசியல் மற்றும் மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த உத்தரவுக்கு முழுமையான தடை வழங்க நீதிமன்றம் மறுத்தாலும், உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தரப்புக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி, அதுவரை உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.