பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள ஏழு மேல்சபை (எம்.எல்.சி.) இடங்களுக்கு ஜூன் 18ல் தேர்தல் நடைபெற உள்ளது. ரகசிய வாக்குப்பதிவு என்பதால் கட்சிகள் அனைத்தும் வாக்குகள் சிதறுமோ என்ற கவலையுடன் தயாராகி வருகின்றன.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 28 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. தற்போதைய எண்ணிக்கையைப் பொருத்தவரை ஆளும் காங்கிரஸ் நான்கு இடங்களையும், பா.ஜ.க. இரண்டு இடங்களையும் எளிதாக கைப்பற்றும் நிலை உள்ளது.
ஆனால் போட்டி சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிகளில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சில சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நம்பி காங்கிரஸ் ஐந்தாவது வேட்பாளரையும் களமிறக்கியுள்ளது. 19 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள ம.ஜ.த.வும் ஒரு வேட்பாளரை நிறுத்தி, கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என நம்புகிறது.
ரகசிய வாக்குப்பதிவில் கட்சி மாறி வாக்களிப்பு நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக, காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்களை ஒன்றாக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. பிடதியில் உள்ள ‘ஒண்டர்லா’ சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்களுக்காக 150 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ம.ஜ.த. தலைவர்கள் காங்கிரஸின் 14 எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டதாக தகவல் வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு அதே விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.





