தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியை குறிவைத்து மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதும் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் “கழுத்தறுப்பு” போன்றவை என்றும், அவை ராகுலின் ஆதரவுடன் நடந்ததாகவும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
ஜூன் 8 அன்று நடந்த ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் தாம் பேசியதை ராகுல் காந்தி ஜூன் 11 அன்று வெளியிட்டதாகவும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாநில அளவில் ‘இண்டி’ கூட்டணியின் ஒற்றுமை குலைய காரணமானவர் ராகுல் தான் எனவும், தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தபோதும் காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ராகுலின் “ஆசீர்வாதத்துடன்” நடந்தவை எனவும் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் துணை தலைவர் விஜயன், ராகுலை தொடர்ந்து கொச்சைப்படுத்தி தரம் தாழ்த்தி எழுதுவது தி.மு.க.வின் ஆணவத்தையும் அகங்காரத்தையும் காட்டுகிறது என்றார். மேலும், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கியது முதல்வர் விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றும், அதனால் தி.மு.க.வுடன் இருந்த கட்சிகள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளன என்றும் கூறினார்.





