மும்பை: மஹாராஷ்டிராவில் ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் அரசியல் நகர்வுகள் நடைபெறலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது. உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் பார்லிமென்ட் பருவகால கூட்டத்தொடருக்கு முன்னதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 7 லோக்சபா எம்பிக்கள், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
சிவசேனா தலைவர் மற்றும் எம்எல்ஏவுமான கிருபாலு மானே, அந்த 7 எம்பிக்களும் கூட்டத்தொடருக்கு முன்பே ஷிண்டே முகாமில் சேர்க்கப்படுவார்கள் என்றும், மஹாராஷ்டிரா அரசியலில் விரைவில் ‘ஆபரேஷன் டைகர்’ அரங்கேறும் என்றும் தெரிவித்தார்.
எம்பிக்களுக்குப் பிறகு எம்எல்ஏக்களையும் குறிவைத்து இதேபோன்ற முயற்சி நடைபெறும் என்றும், தற்போது 16 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.





