அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக கூறி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் 2024ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து நன்கொடைகள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் கணக்குகளை கவனித்த மஹிபால் சிங் என்பவர், பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள் முறையாக கையாளப்படவில்லை என புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் பாஜக அரசு மவுனம் காப்பதாக குற்றஞ்சாட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விவகாரத்தை விசாரிக்க மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்தார்.

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அனுப் பிரகாஷ் அவஸ்தி தாக்கல் செய்த மனுவில், நன்கொடைகள் மற்றும் காணிக்கைகள் சரியாக கையாளப்படவில்லை என்றும், வரவு-செலவு கணக்குகளை பராமரிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி கையாடல் நடந்திருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; மேலும் கோவில் கணக்குகள் மற்றும் நன்கொடைகளை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் கீழ் நிரந்தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.