தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு ரூ.10-க்கும் மேல் கூடுதலாக வசூலித்ததாக கடந்த 20 நாட்களில் 200 பணியாளர்கள் பணியிடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.
சில கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10, ரூ.20 என விருப்பப்படி கூடுதல் தொகை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகார்கள் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின்னும் கூடுதல் வசூல் தொடர்ந்ததாக கூறப்பட்ட நிலையில், இதைத் தொடர்ந்து கடைகளில் தீவிர ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டது.
மேலும், இந்த பணியில் அலட்சியம் காட்டினால் மேலாளர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் கடைகளில் முழுவீச்சில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கூடுதல் வசூலில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 200 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.





