நீட் தேர்வு தொடர்பான வினாத்தாள் கசிவு மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான மறு தேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மறு தேர்வை எந்த இடையூறும் இல்லாமல் நடத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெலிகிராம் தளத்தில் சில சமூக விரோதிகள் “கசிந்த வினாத்தாள் எங்களிடம் உள்ளது” என்று கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாக கூறப்படுகிறது. இதுபோன்றவர்களை அடையாளம் காணவும், மாணவர்கள் ஏமாறாமல் இருக்கவும் தேசிய தேர்வு முகமை (NTA) நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு ஜூன் 22 வரை டெலிகிராமுக்கு தற்காலிக தடையை அமல்படுத்தியுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-ன் கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், குற்றவாளிகள் தொடர்பான டிஜிட்டல் தடயங்கள் ‘எடிட்’ வசதியால் அழிக்கப்படாமல் இருக்க, ஏற்கனவே வெளியிடப்பட்ட டெலிகிராம் பதிவுகளைத் திருத்துவதற்கும் ஜூன் 30 வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.