கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட ரூ.75 ஆயிரம் வரை உள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வர் விஜய் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதற்கு முன் அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் ரூ.50 ஆயிரம் வரை முழுத் தள்ளுபடி வழங்கப்பட்டு, அதற்கு மேற்பட்ட நிலுவைகளுக்கு படிப்படியாக தள்ளுபடி அளிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பில் குறைபாடுகள் உள்ளதாகவும், வாக்குறுதியின்படி முழுத் தள்ளுபடி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கங்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இன்று வெளியான அரசின் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகள் வழியாக ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி வரை கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகள் இதில் உள்ளடங்குவதாகவும், தள்ளுபடி தொகை ரூ.6,000 கோடி வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை பணப்பயன் கிடைக்கும் என அரசு தெரிவித்தது. வரவிருக்கும் சாகுபடி பருவத்திற்காக புதிய கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி தொகை விவரப்படி, 8,33,773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி, 5,16,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடி, 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 14,43,504 விவசாயிகளுக்கான உத்தேச தள்ளுபடி தொகை ரூ.5,932.23 கோடி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.